பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க திரிணமுல் காங்கிரஸ் முடிவு
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ். தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு.
மே.வங்காளம்: 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் கலந்துக்கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தின் ஸ்ரீராம்பூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வாங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து தாக்கி பேசினார்.
மேற்கு வங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி பல துரோகங்களை செய்துள்ளார். சிட் ஊழல் வழக்கில் தங்கள் கட்சிக்காரர்களை காப்பாற்றவே மம்தா பணிபுரிகிறார். இதற்கு பொதுமக்கள் நிச்சயமாக பதில் அளிப்பார்கள். பொதுமக்கள் தவறுகளை மன்னிக்கக்கூடும் ஆனால் துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள் எனக் கடுமையாக சாடினார்.
மேலும் திரிணாமுல் காங்கிரசஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்களில் எங்கள் தொடர்பில் இருக்கிறார்கள். வரும் மே 23 தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரசஸ் கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி எங்கள் கட்சியில் இணைய உள்ளனர். விரைவில் மம்தா பானர்ஜிக்கு அரசியலில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் எனக் கூறினார்.
பிரதமர் மோடியின் குற்றசாட்டுக்கு பதில் அளித்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், எங்கள் கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணையப் போவதாக மோடி கூறுவது பொய். அப்படி எதுவும் நடக்காது எனக் கூறினார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இல்லை, ஒரு கவுன்சிலர் கூட பாஜகவில் இணைய மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் தேர்தல் பிரசாரத்தில் இதுபோன்ற பொய்யான குற்றசாட்டுகள் மற்றும் குதிரைப்பேர அரசியலை பிரதமர் மோடி பேசி வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் எனவும் கூறினார்.