சிவசேனா-விற்கு மேலும் இரு MLA-க்கள் ஆதரவு தெரிவிப்பு...
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி தொடர்பாக பாஜக-வுக்கும் சிவசேனா-வுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், பிரஹர் ஜனசக்தி கட்சியின் (PJP) இரண்டு MLA-க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி தொடர்பாக பாஜக-வுக்கும் சிவசேனா-வுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், பிரஹர் ஜனசக்தி கட்சியின் (PJP) இரண்டு MLA-க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
PJP தலைவர் பச்சு காடு மற்றும் அவரது கட்சி MLA ராஜ்குமார் படேல் ஆகியோர் சிவசேனா தலைவர் தாக்கரேவை சனிக்கிழமை இரவு சந்தித்து அவருக்கு ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இச்சந்திப்பினை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பச்சு காடு தெரிவிக்கையில்., "உத்தவ் ஜியுடன் இடம்பெயர்வு, வேலைவாய்ப்பு மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். எங்களுக்கு இரண்டு MLA-க்கள் உள்ளனர், இந்த பிரச்சினைகள் குறித்து உத்தவ் ஜி உறுதியளித்த பின்னர், சிவசேனாவை ஆதரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
மெல்காட் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த PJP MLA ராஜ் குமார் இதுகுறித்து தெரிவிக்கையில்., தாக்கரே அவர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான பதிலை அளித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் தனது தொகுதியில் சாலை, நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான அடிப்படை பிரச்சினைகள் இருப்பதாகவும், படித்த இளைஞர்களிடையே வேலையின்மை மற்றும் கிராமங்களிலிருந்து குடியேறுவது போன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட ராஜ் குமார், தங்களுடைய பிரச்சனைகளை சரி செய்ய உத்தவ் தாக்கரேவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சனிக்கிழமை அன்று, இரண்டு சுயேட்சை MLA-க்களான ஆஷிஷ் ஜெய்ஸ்வால் மற்றும் நரேந்திர போண்டேகர் ஆகியோர் தாகரேவை மும்பையில் உள்ள 'மாடோஷ்ரீ' என்ற இடத்தில் சந்தித்தனர். கூட்டத்திற்குப் பிறகு, இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் கட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கியதாக சிவசேனா தெரிவித்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில்., 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் மொத்தம் 105 பாஜக MLA-க்கள் வெற்றி பெற்றுள்ளனர், சிவசேனா 56 இடங்களை வென்றுள்ளது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜக-விற்கு போதுமான எண்ணிக்கை தங்கள் கைவசம் இல்லை. என்றபோதிலும், பாஜக-சிவசேனா கூட்டணி இணைந்து மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
எனினும் பாஜக-விற்கு சிவசேனா தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுமாயின் வொர்லி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வென்ற ஆதித்யா தாக்கரேவுக்கு முதலமைச்சர் பதவியை அளிக்க வேண்டும் என நிர்பந்தித்து வருகிறது சிவசேனா.
உத்தவின் நிலை கருத்தில் கொள்ளப்பட்டால், முதல்வரின் நாற்காலி இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவுக்குச் செல்லும், மீதமுள்ள காலம் பாஜக முதல்வர் தலைமையில் இருக்கும். இதனிடையே சிவசேனா, அமைச்சரவையிலும் 50% பங்குகளை கோருகிறது. மேலும், முதல் காலத்திற்கு சிவசேனா முதல்வர் நாற்காலி கிடைக்கவில்லை என்றால், உத்தவ் தாக்கரே, உள்துறை, நிதி, வருவாய், நகர அபிவிருத்தி, வன மற்றும் கல்வி அமைச்சுகளை தனது கட்சிக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறார். சிவசேனாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், ஆதித்யா மகாராஷ்டிராவின் இளைய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
எனினும் மாகாராஷ்டிர முதல்வர் நார்காலி குறித்து இறுதி திட்டம் இரு கட்சி கூட்டத்திற்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.