எல்லையில் ஊடுருவல் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஆகஸ்ட் 15-நம் தேதி நாட்டின் 60-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபடலாம் என்று உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் வழியாக இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடலாம் என்று கருதி எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டது . இந்த நிலையில் காஷ்மீரின் எல்லைப் பகுதியான குப்வாரா மாவட்டம் நவ்கம் என்ற இடத்தின் வழியாக ஏராளமான தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டனர். உடனே அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினரும், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் முற்றுகையிட்டு சுற்றி வளைத்தனர்.
உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதில் 2 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு பிடிபட்டனர். துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒரு வீரர் காயம் அடைந்தார்.
இந்த தாக்குதலால் தீவிர வாதிகள் அங்கிருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் பின் வாங்கிச்சென்று விட்டனர். இதனால் மிகப்பெரிய அளவில் தீவிரவாதிகள் ஊடுருவலை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.