புல்வாமா தாக்குதலுக்கு நீதி கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புல்வாமா தாக்குதலுக்கு நீதிகிடைக்க அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் (John Bolton) உறுதியளித்துள்ளார்.


அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஜான்போல்ட்டன், இந்தியா, தன்னை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.


ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்களின் புகலிடமாக பாகிஸ்தான் இருக்கும் நிலைக்கு முடிவுகட்ட, இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


ஐ.நா. தீர்மானங்களின்படி பாகிஸ்தானை அதன் கடமைகளுக்கு பொறுப்பாக்கவும், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு தடையாக உள்ள இடையூறுகளை அகற்றவும் இருவரும் உறுதிபூண்டுள்ளனர்.


தீவிரவாதிகளுக்கு தனது மண்ணில் இடமளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஏற்கெனவே வெள்ளை மாளிகையும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.