புல்வாமா வீரர்களின் குடும்பங்களைச் சந்திக்க 61,000 km பயணித்த வீரர்!
61,000 கி.மீ தூரம் பயணித்து, தாக்குதலில் இறந்த வீரர்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று அங்குள்ள மண்ணைச் சேகரித்து வந்த உமேஷ் கோபிநாத் ஜாதவ்.
சரியாக ஒரு வருடம் முன்பு, பிப்ரவரி 14 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் மீது பயங்கரவாத படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலின் முதல் ஆண்டு நினைவு நாளில் முழு தேசமும் துக்கத்தில் மூழ்கியுள்ளது.
தாக்குதலில் இறந்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு காஷ்மீரில் லெத்போரா எனும் பகுதியிலுள்ள சிஆர்பிஎஃப் முகாமில் இன்று நடைபெற்றது.
யார் இந்த உமேஷ் கோபிநாத் ஜாதவ்?
கடந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று ராஜஸ்தானிலுள்ள விமான நிலையம் ஒன்றில் உமேஷ் காத்துக்கொண்டிருந்தார். விமானநிலையத்தில் இருந்த தொலைக்காட்சியில் புல்வாமா தாக்குதல் குறித்த செய்திகளைக் கவனித்த அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தாக்குதலில் இறந்த வீரர்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று அங்குள்ள மண்ணைச் சேகரித்து வந்து இந்திய வரைபடம் ஒன்றை வரைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணத்தைத் தொடங்கினார்.
இதற்காக சுமார் 61,000 கி.மீ தூரம் பயணித்து, தாக்குதலில் இறந்த வீரர்களின் உறவினர்களைச் சந்தித்துள்ளார். இந்தப் பயணத்தைக் கடந்த வாரம் முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தாக்குதலில் இறந்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு காஷ்மீரில் லெத்போரா எனும் பகுதியிலுள்ள சிஆர்பிஎஃப் முகாமில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உமேஷ் கோபிநாத் ஜாதவ் கலந்துகொண்டார்.