உத்தரபிரதேசத்தில் கோர்ட்டு அறைக்குள் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 18 போலீஸ்காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டத்துக்கு உட்பட்ட நஜிபாபாத் பகுதியை சேர்ந்த நிலத்தரகரான எஹ்சான் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ‌ஷாநவாஸ், ஜப்பார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 


இந்த வழக்கு விசாரணைக்காக இவர்கள் இருவரும் பிஜ்னோர் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு மாஜிஸ்திரேட்டு முன்பு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென கோர்ட்டு அறைக்குள் எஹ்சானின் மகன் உள்பட 3 பேர் நுழைந்து ஷாநவாஸ் மற்றும் ஜப்பார் ஆகியோர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ‌ஷாநவாஸ் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 போலீஸ்காரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும் கோர்ட்டு வளாகத்திலேயே போலீசாரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டனர்.


இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் தியாகிக்கு, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அருண் குமார் சிங் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை பரிசீலித்த போலீஸ் சூப்பிரண்டு, சம்பவத்தின் போது கோர்ட்டு வளாகத்தில் பணியில் இருந்த 18 போலீஸ்காரர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.