கண்னுஜ்: உத்தரபிரதேசத்தின் கண்னுஜ்ஜில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. ஒரு டிரக் மற்றும் டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பஸ் கடுமையாக மோதிக்கொண்டதில் பல பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சிப்ராமாவ் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. பயங்கரமாக மோதிய பின்னர் லாரி மற்றும் பஸ் இரண்டும் தீப்பிடித்தன. இந்த சம்பவம் நடந்த நேரத்தில், 50 பயணிகள் பஸ்ஸுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர் வெளியே வந்தனர். மீதமுள்ளவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வரை ​​இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறையின் மூன்று வாகனங்கள் சம்பவ இடத்தை அடைந்தன. தொடர்ந்து நடைபெற்ற முயற்சிகளுக்குப் பிறகு, தீ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.


கான்பூர் ஐ.ஜி. மோஹித் அகர்வாலின் கூற்றுப்படி, இந்த நேரத்தில் இறப்புகள் குறித்து எதுவும் கூற முடியாது. ஆனால் நேரில் பார்த்தவர்கள் கூறியதை வைத்து பார்த்தால் உயிர் இழப்பு அதிகமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. கண்ணாஜில் உள்ள சிப்ராமாவில் ஜிடி சாலை நெடுஞ்சாலையில் கிராம கிலோய் அருகே லாரி மற்றும் டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பஸ் இடையே கடுமையான மோதல் நடந்தது. மோதிய இரு வாகனங்களும் தீப்பிடித்தன. இந்த விபத்தில், ஸ்லீப்பர் கோச் பஸ்ஸில் இருந்த பல பயணிகள் தீ விபத்தில் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. ஒரு பெரிய கூட்டம் சம்பவ இடத்தில் உள்ளது.


தீ விபத்து குறித்து அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கண்ணாஜ் மாவட்ட அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உடனடியாக அந்த இடத்தை அடைந்து பயணிகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


ஸ்லீப்பர் கோச் பஸ் ஃபாருகாபாத்தில் இருந்து சிப்ராமாவ் வழியாக ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், லாரி கண்ணாஜின் பீவாரில் இருந்து கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இரவு 8 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.


பஸ்ஸில் தீப்பிடித்தவுடன் கேட் மற்றும் ஜன்னல்கள் மூலம் பஸ்ஸிலிருந்து பயணிகள் வெளியே குதித்ததாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்தனர். சில நிமிடங்களில் தீ வேகமாக பரவியதால் தூங்கிக்கொண்டு இருந்த பயணிகள் வெளியே வர முடியவில்லை. பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.