உத்தரப்பிரதேசத்தில் இன்று 4-ம் கட்ட தேர்தல்!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரிடையே மோதல் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பல கட்டங்களாக, வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. இதன்படி, ராய் பரேலி, பண்டல்காண்ட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 53 தொகுதிகளுக்கு, இன்று 4-ம் கட்டமாக, வாக்குப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் வாக்கு செலுத்தி வரும் நிலையில், அங்குள்ள மஹோபா என்ற பகுதியில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரிடையே மோதல் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக, சித்கோபால் சாஹூ என்பவர் போட்டியிடுகிறார். இன்று மஹோபா வாக்குச் சாவடியில், அவரது ஆதரவாளர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை சண்டை முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், வேட்பாளர் சித்கோபாலின் மகன் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்குப் போலீசார் விரைந்து வந்தனர்.