குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் NRC-க்கு எதிரான போராட்டங்கள் தொடர்கையில், ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இதன்போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக உத்தரப்பிரதேச அரசு 498 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான ஒரு சுற்றறிக்கையின் படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்கும்போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சமூக விரோதிகள் என மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட "சமூக விரோதிகளின்" சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் இப்போது நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட நீதிபதிகளுக்கு உபி காவல்துறை தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்த பட்டியலின்படி லக்னோவைச் சேர்ந்த 82 பேர், மீரட்டில் இருந்து 148 பேர், சம்பலில் இருந்து 26 பேர், ராம்பூரில் இருந்து 79 பேர், பெரோசாபாத்தில் இருந்து 13 பேர், கான்பூரிலிருந்து 50 பேர், முசாபர்நகரிலிருந்து 73 பேர், மாவோவைச் சேர்ந்த 8 பேர் மற்றும் புலந்த்ஷாஹரைச் சேர்ந்த 19 பேர் சமூக விரோதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டிசம்பர் 10 முதல் 24 வரை மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைப்பெற்ற போராட்டங்களின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)) எதிரான வன்முறை எதிர்ப்புக்களுக்கு, தடுப்பு நடவடிக்கையாக பல மாவட்டங்களில் இணைய சேவைகளை உத்தரபிரதேச அரசு வியாழக்கிழமை நிறுத்தியது. முழு மாநிலத்திலும் பிரிவு 144-னை அரசாங்கம் அமுல் படுத்தியுள்ளது.


தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமையை மனதில் வைத்து புலாந்த்ஷர், ஆக்ரா, சம்பல், பிஜ்னோர், சஹரன்பூர், காஜியாபாத், முசாபர்நகர், ஃபிரோசாபாத், மதுரா, ஷாம்லி மற்றும் அலிகார் ஆகிய 14 இடங்களில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


தரவுகளின்படி, 5,558 பேர் மீது தடை உத்தரவு எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காக மொத்தம் 81 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவாக வெளியான 7,513 ட்விட்டர் பதிவுகள், 9,076 பேஸ்புக் பதிவுகள் மற்றும் 172 யூடியூப் வீடியோக்கள் பதிவிட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டங்களில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 288 காவலர்கள் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 61 காவலர்கள் துப்பாக்கியால் காயமடைந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது.