லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலில், முதல்வர் அகிலேஷின் தம்பி மனைவி அபர்ணா யாதவுக்கு, 'சீட்' கொடுக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உ.பி-யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்டசபை தேர்தல், ஏழு கட்டமாக, பிப்ரவரி 11-ம் தேதி முதல், மார்ச் 8-ம் தேதி வரை நடக்கிறது.
 
உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சி, இதுவரை வெற்றி பெறாத தொகுதிகளில், தலைநகர் லக்னோவில் உள்ள, லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியும் ஒன்று. 


2012 சட்டசபை தேர்தலில், இந்த தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் அப்போதைய மாநில தலைவர், ரீட்டா பகுகுணா வெற்றி பெற்றார். இவர், கடந்த நவம்பரில், பா.ஜ.,வில் சேர்ந்தார். 


முலாயம் சிங் யாதவ், தன் இரண்டாவது மனைவி சாதனா குப்தா மகன், பிரத்திக்கின் மனைவி அபர்ணாவை, 27, வேட்பாளராக, ஒரு ஆண்டுக்கு முன் அறிவித்தார். அதையேற்று, தொகுதியில், ஓராண்டாக, அபர்ணா தீவிரமாக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின், 31 தொகுதிகளுக்கான 4-வது வேட்பாளர்கள் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில், லக்னோ கன்டோன்மென்ட் தொகுதி வேட்பாளராக அபர்ணா அறிவிக்கப்பட்டுள்ளார்.


லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் ரீட்டா பகுகுணா, முன்னாள் முதல்வர் எச்.எம்.பகுகுணாவின் மகள் 25 ஆண்டு அரசியல் அனுபவம் பெற்றவர். 


அவரை எதிர்த்து, சமாஜ்வாதி கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அபர்ணா, மான்செஸ்டர் பல்கலையில், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்.