உ.பி.யில் தாய் மற்றும் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் தாய் மற்றும் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் காரணமாக உ.பியில் காட்டாட்சி நடைபெறுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
நொய்டா நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தில்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். தில்லி-கான்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்றிருந்த ஐந்துபேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் அந்த காரை வழிமறித்து அவர்களிடம் இருந்த பணம், நகைகள் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்ததுடன் அவர்களுடன் இருந்த 13 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை மிரட்டி, பக்கத்தில் இருந் புதர்க்குள் இழுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அம்மநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உத்தரபிரதேசம் மாநிலத்தில் காட்டாட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து மாயாவது செய்தியாளர்களிடம் கூறுகையில்:- இது போன்ற சம்பவங்கள் மக்கள், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சமாஜ்வாடி அரசு தவறிவிட்டதை காட்டுகிறது. உத்தரபிரதேசத்தில் முழுமையான காட்டாட்சியே செயல்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அலட்சியமாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டி.பி.சிங் கூறுகையில்:- இது ஒரு வெட்கக் கேடான சம்பவம். தேசிய நெடுஞ்சாலையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதை காட்டுகிறது என்றார்.
பாஜக மாநில பொது செயலாளர் விஜய் பகதூர் கூறுகையில்:- உத்தரபிரதேசம் மாநிலத்தில் முழுமையான காட்டாட்சி நடைபெறுகிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி. உ.பி.யில் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் அலட்சியமாக இருந்துவரும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.