உத்தரபிரதேசம் மாநிலத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவை விமர்சித்து தனது பதவியை ராஜினாமா செய்யுங்கள் என மாயாவதி கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் காரில் சென்ற தாய் மற்றும் 13 வயது மகளை கடத்திச்சென்று கற்பழித்ததுடன், நகை, பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றது. போலீஸ் சோதனை சாவடியில் இருந்து சில மீட்டர் தொலைவிலே நடைபெற்று உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்திவரும் போலீஸ் குற்றவாளிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு உள்ளது. 


காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற பல்வேறு கட்சிகளும் இச்சம்பவத்தில் மாநிலத்தில் உள்ள சமாஜ்வாடி அரசை கடுமையாக சாடிஉள்ளது.


இந்த கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:- உத்தர பிரதேசத்தில் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பது இச்சம்பத்தில் இருந்து தெரிகிறது. சமாஜ்வாடி ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இது போன்ற அட்டூழியத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மேலும் இச்சம்பவத்தை தடுக்க தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 


மேலும் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சமாளிக்க முடியவில்லை என்றால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.