சுகாதார திட்டங்கள் வாஜ்பாய் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது: மோடி
பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக நரேந்திர மோடி அவர்கள் தனது சொந்த ஊரான குஜராத்தில் உள்ள வத் நகருக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு அவர் மருத்துவமனையை திறந்துவைத்தார்.
பின்னர் பேசுகையில், இந்த நகரம் 2,500 வருடத்திற்கு முன்னர் இருந்து வருகிறது. இன்று நான் இருக்கும் நிலைக்கு இந்நகரத்தின் கலாசாரம் காரணம். எனக்கு சிறப்பான மதிப்புகளை இந்த நகரம் கற்று கொடுத்துள்ளது.
சொந்த ஊரில் இருப்பது சிறப்பான உணர்வை தருகிறது. சுற்றுலா மையாக இந்த நகரம் திகழும். சீனாவுக்கும் இந்நகரத்திற்கும் பெரிய தொடர்பு உள்ளது. உங்கள் ஆசியுடன் இங்கிருந்து செல்கிறேன். இன்னும் நாட்டிற்காக கடுமையாக உழைப்பேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
சுகாதார திட்டங்கள் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவை. காங்கிரசின் 10 வருட ஆட்சி காலத்தில் சுகாதார திட்டங்கள் முடக்கப்பட்டன. சுகாதாரம் அனைவருக்கும் எளிதாக சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.