மங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் நேற்று இரவு மங்களூர் புறநகர் பகுதியில் திடீரென மாயமாகியுள்ளார். இச்சம்பவம் கர்நாடகாவில் மட்டுமில்லை, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று இரவு மங்களூர் புறநகர் பகுதியில் காரில் சென்றுக்கொண்டிருந்த சித்தார்த், தனது ஓட்டுனரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். காரை நிறுத்தியதும் கீழே இறங்கிய சித்தார்த் ஓட்டுனரிடம் "நான் சிறிது தூரம் நடந்து செல்கிறேன்" எனக்கூறிவிட்டு நடந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சித்தார்த் திரும்பி வராததால், அவரின் மொபைல் எண்ணுக்கு ஓட்டுனர் அழைத்து உள்ளார். அவரின் மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.


இதனால் அச்சமடைந்த ஓட்டுநர் சித்தார்த்தின் உறவினருக்கும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற  போலீசார், ஓட்டுநரிடம் நடந்ததை விசாரித்து விட்டு, தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.


இதுகுறித்து போலீசாரிடம் ஓட்டுநர் கூறியது, இரவு 8 மணி ஆகியும் சித்தார்த்தா திரும்பாதபோது, அவரின் தொலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் அவரின் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப்பாக இல்லை. ரிங் ஒலித்தது. ஆனால் அழைப்பு எடுக்காததால், "இரவு 9 மணியளவில், நான் சித்தரத்தின் மகன் அமர்த்தியா ஹெக்டேவை அழைத்து என்ன நடந்தது என்று அவரிடம் தெரிவித்தேன் எனக் கூறினார். 


இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.30 மணியளவில் மங்களூருவில் உள்ள கங்கனடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. சித்தார்த் காணாமல் போன நேரத்தில் கருப்பு சட்டை மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தார். இரவு 8 மணிக்கு சித்தார்த்தாவுக்கு முதல் அழைப்பு விடுப்பதற்கு முன்பு கார் எந்த நேரத்தில் மங்களூருவை அடைந்தது, டிரைவர் காரில் எவ்வளவு நேரம் காத்திருந்தார் என்று புகார் நகலில் கூறப்படவில்லை. 


இதற்கிடையில், நேத்ராவதி ஆற்றில் தேடுதல் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்கொலை செய்துக்கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


நேற்று அவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், "என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் கைவிட்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீண்டகாலமாக போராடி வருகிறேன். என்னால் முடியவில்லை. அனைத்தையும் நான் கைவிடுகிறேன். ஒரு பிஸினெஸ் மேனாக நான் தோல்வியடைந்துவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்" என உருக்கமாக எழுதியுள்ளார்.