70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ்ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் 9 பேரும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து சட்டசபையில் கடந்த மாதம் அரசின் நிதி மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். எனினும் நிதி மசோதா சட்டசபையில் நிறைவேறியதாக சபாநாயகர் கோவிந்த் சிங் தெரிவித்தார்.அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டப்படி நீக்கம் செய்வதாகவும் அறிவித்தார். 9 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டதால் சட்டசபையில் பெரும்பான்மையை மார்ச் 28–ந்தேதிகுள் நிரூபிக்கும்படி மாநில கவர்னர் கே.கே.பால் உத்தரவிட்டார். ஹரிஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏ.க்களுடன் பணப் பேரம் பேசுவதாக குற்றச்சாட்டப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்பாகவே மார்ச் 27-ந்தேதி அம்மாநிலத்தில் திடீரென ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து ஹிரிஷ் ராவத் சார்பில் நைனிதால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ததுடன் வருகிற 29–ந்தேதி ஹரிஷ் ராவத் அரசு சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்றும் கூறியது. 


இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அப்போது ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 


இந்நிலையில் நாளை உச்ச நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை வழங்க உள்ளது. ஹரிஷ் ராவத் பெரும்பான்மையை நிருபிப்பாரா?