டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 69 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணி முதலே மக்கள்  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட்டில் ஒரு தொகுதியில், வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததால் அந்த  தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மற்ற 69 தொகுதிகளிலும் 637 வேட்பாளர்கள் தேர்தலில் களம் காண்கின்றனர். 


அதே நேரத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் 67 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கும்  மக்கள் உற்சாகத்துடன் அதிகாலை முதலே வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


தற்போது உத்தரகாண்டில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி ஹரீஸ் ராவத் தேர்தல் குறித்து கூறும்போது,  குறைந்த பட்சம் 45 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பிடிப்போம் என்று கூறியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் 32 இடங்களையும், பாரதிய ஜனதா 31 இடங்களையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


உத்தரகாண்டில் இன்றும், மணிப்பூரில் அடுத்த மாதம்  4 மற்றும் 8-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக மார்ச் 8-ம்  தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.