கால்நடை மருத்துவரை கடத்தி கட்டாய திருமணம் செய்த கும்பல்: பீகாரில் அடாவடித்தனம்
சத்யம் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டாரா அல்லது அவரது விருப்பத்தின்படி அவர் திருமணம் செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, அவருக்கு ஒரு பெண்ணுடன் கட்டாய திருமணம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பக்கத்து கிராமத்தில் இருப்பவர்கள், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி முதலில் அவரை அழத்ததாகவும், பின்னர் அவர் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
தெக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிதௌலி கிராமத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரின் தந்தை சுபோத் குமார் ஜா, மூன்று பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
கால்நடை மருத்துவரான தனது மகன் சத்யம் குமாரை ஹசன்பூர் கிராமத்தில் வசிக்கும் விஜய் சிங் அழைத்ததாக அவர் கூறினார். பின்னர் விஜய் சத்யத்தை கடத்தி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். பொலிசார் பாதிக்கப்பட்டவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் இந்த வழக்கில் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
வீடியோ வெளியானது
இதற்கிடையில், சத்யம் ஒரு கோவிலில் மணமகன் தோற்றத்தில் ஒரு பெண்ணுடன் திருமண சடங்குகளை செய்யும் வீடியோ ஒன்று இப்போது வெளிவந்துள்ளது. வீடியோவில், மணமகள் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அருகில் சத்யம் இருப்பதைக் காண முடிகின்றது. ஒரு முதியவர் மந்திரங்களை உச்சரிப்பதையும், தம்பதிகள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் காணலாம். சத்யம், பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.