குஜராத்தின் புதிய முதல்-மந்திரியாக விஜய் ரூபானி தேர்வு
பாரதீய ஜனதாவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், 75 வயது நிரம்பியதும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் வரும் நவம்பர் மாதத்தில் 75 வயது நிறைவடைய இருக்கும் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுவும் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து நேற்று குஜராத் வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அடுத்த முதல்வர் யார் என்று ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் நிதின் பட்டேல் மற்றும் விஜய் ரூபானிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியின், தலைமை அலுவலகத்தில் புதிய முதல்வரைத் தேர்வு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, உள்ளிட்ட முக்கிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து குஜராத் மாநில புதிய முதல்-மந்திரியாக விஜய் ரூபானி செயல்படுவார் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார். நிதின் பட்டேல் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. விஜய் ரூபானி மற்றும் நிதின் பட்டேலுக்கு பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, நிதின் கட்காரி, ஆனந்திபென் படேல் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.