கலவரத்தில் முடிந்த ராமநவமி ஊர்வலம்...ஒருவர் பலி
ராம நவமியை ஒட்டி மத்தியப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலங்களில் கலவரம் ஏற்பட்டது. குஜராத் மாநிலம் கம்பாத் பகுதியில் நடைபெற்ற மோதலில் ஒருவர் பலியானார்.
நாடு முழுவதும் ராம நவமி நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன. மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடைபெற்ற ஊர்வலம் வேறொரு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் சென்றபோது ஒலிப்பெருக்கிகளை சத்தமாக இசைப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஊர்வலம் பாதியிலேயே தடைபட்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் வாகனங்களுக்கு தீ வைப்பு, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | குஜராத் பருச் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு; 6 பேர் பலி
இதே போன்று குஜராத் மாநிலம், காம்பத் மற்றும் ஹிம்மத்நகரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. கம்பாத் பகுதியில் நடைபெற்ற மோதலில் 65 வயது முதியவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். இரு பகுதிகளிலும் கல் வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, மாநிலத்தின் அமைதியான சூழலை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதேபோன்று, ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியில் ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். மேற்கு வங்க மாநிலம் சிவ்பூர் பகுதியில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில், ராமநவமியை ஒட்டி அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இரண்டு மாணவர் குழுக்கிடையே நடைபெற்ற மோதலில் 19 பேர் காயமடைந்தனர்.
இந்த கலவரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, வெறுப்புணர்வு இந்தியாவை பலவீனப்படுத்தி வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்டதால் அராஜகம்; பல மாணவர்கள் படுகாயம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR