`என்னை மன்னிக்கவும்...` அரசியலில் இருந்து விலகினார் வி.கே. பாண்டியன் - என்ன காரணம்?
VK Pandian Retired: ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
VK Pandian Retired From Active Politics: நடந்து முடிந்த 18ஆவது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். மக்களவை தேர்தலையொட்டி ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களும், பல்வேறு மாநிலங்களின் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடத்தப்பட்டது.
மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைகிறது மறுபுறம் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் ஆளும் கட்சிகள் ஆட்சியை இழக்கின்றன. ஆந்திராவில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்கும் நிலையில், ஒடிசாவில் பாஜக ஆட்சியை முதல்முறையாக கைப்பற்றி உள்ளது. குறிப்பாக, ஆந்திராவில் 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆர்சிபி கட்சியும், ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக செயலாற்றிய நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியும் ஆட்சியை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தோல்விக்கு முக்கிய காரணம்
இதில் பிஜூ ஜனதா தளத்தின் தோல்விக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரச்சார யுக்தி ஒரு முக்கிய காரணம் எனலாம். குறிப்பாக, பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய பிரமுகரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனை குறிவைத்து பாஜக ஒரு பெரும் பிரச்சார வியூகத்தை அளித்தது. அதிலும் முக்கியமாக, தமிழரான வி. கே. பாண்டியன் எப்படி ஒடிசாவை ஆள முடியும் போன்ற பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா மேற்கொண்டதை கூறலாம். இதையொட்டி நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்த பிரச்சாரமும் அவர்களுக்கு கைக்கொடுத்தது. அந்த வகையில் பிஜூ ஜனதா தளத்தின் இந்த மோசமான தோல்விக்கு வி.கே. பாண்டியன் ஒரு முக்கிய காரணம் என அரசியல் வல்லுநர்கள் கூறி வந்தனர்.
மேலும் படிக்க | வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!
8 மாதங்களுக்குள்...
இந்நிலையில், வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜூ ஜனதா தளத்தில் இணைந்துகொண்ட பாண்டியன் வெறும் 8 மாத காலத்தில் தீவிர அரசயலில் இருந்து விலகியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது,"...இப்போது சுயநினைவுடன் தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இந்தப் பயணத்தில் யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரச்சாரத்தால் பிஜூ ஜனதா தளம் ஒடிசாவில் தோல்வியடைந்திருந்தால், என்னை மன்னிக்கவும்" என பேசியிருந்தார்.
4 நிமிடங்களுக்கு மேலான அந்த வீடியோவில்,"நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இங்கு வந்துள்ளேன். ஐஏஎஸ் பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது சிறுவயது கனவு. ஒடிசா மண்ணில் நான் காலடி எடுத்து வைத்த நாளில் இருந்து, ஒடிசா மக்களிடம் அளவற்ற அன்பையும், பாசத்தையும் பெற்றுள்ளேன். ஒடிசா மக்களுக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன்.
'இதுதான் என் நோக்கம்...'
நவீன் பட்நாயக் மூலம் நான் பெற்ற அனுபவமும் கற்றலும் வாழ்நாள் முழுவதுக்குமானது. அவரது கருணை, தலைமைத்துவம், நெறிமுறைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒடிசா மக்கள் மீதான அவரது அன்பு எனக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கக்கூடிய ஒன்றாகும். ஒடிசாவிற்காக தொலைநோக்கான திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்பதே என்னிடம் இருந்து அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் சுகாதாரம், கல்வி, வறுமைக் ஒழிப்பு, துறைமுகங்கள், முதலீடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களில் பல மைல்கற்களை வெற்றிகரமாக கடந்தோம்.
என்னுடைய ஒரு நோக்கம் என்பது ஒரு வழிகாட்டிக்கும், ஒரு குடும்பத்துக்கும் அனைவரும் செய்வது போல் அவர்களுக்கு உதவுவது மட்டுமே. நான் சில கருத்துக்களையும் பேசுக்களையும் வெளிப்படையாக அமைக்க விரும்புகிறேன். ஒருவேளை, கடைசி நேரத்தில் இந்த அரசியல் பேச்சுகளில் இருந்து சிலவற்றை என்னால் திறம்பட எதிர்கொள்ள முடியாமல் போனது எனது குறையாக இருக்கலாம். கடினமான தேர்தலுக்கு முன்பாக எனது வழிகாட்டியான நவீன் பட்நாயக்கிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். குறிப்பிட்ட அரசியல் பதவி அல்லது அதிகாரத்தின் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை என்றும் மீண்டும் வலியுறுத்துகிறேன். அதனால்தான் நான் பிஜு ஜனதாதளத்தில் வேட்பாளராகவும் இல்லை அல்லது அக்கட்சியின் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை.
மன்னிக்கவும்...
நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசாவை மையமாக வைத்து 12 ஆண்டுகள் கடினமாக உழைத்தேன். எனக்கு உள்ள ஒரே சொத்து என் தாத்தா பாட்டியிடம் இருந்து நான் பெற்ற சொத்து. எனக்கோ அல்லது எனது நெருங்கிய குடும்பத்திற்கோ உலகின் எந்த பகுதியிலும் வேறு எந்த சொத்தும் இல்லை. என் வாழ்நாளில் நான் சம்பாதித்த மிகப்பெரிய சம்பாத்தியம் ஒடிசா மக்களின் அன்பும் பாசமும் நல்லெண்ணமும்தான்.
எனது நோக்கம் அரசியலில் சேர்ந்து நவீன் பட்நாயக்கிற்கு உதவுவதே ஆகும். இந்த பயணத்தில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும். நான் தொடர்புள்ள லட்சக்கணக்கான பிஜு ஜனதா தளம் கட்சியின் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ