இன்று டெல்லியில் நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை குறித்து ஆலோசனை செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் என ஐம்பதுக்கு மேற்ப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் நிகழ்ச்சி நிரல், தேர்தல் நடைமுறைகளின் துல்லியத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில், அரசியல் நடைமுறைகளில் பெண்களின் மேம்பட்ட பிரதிநிதித்துவத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை, செலவினத்திற்கான உச்ச வரம்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றியும், கட்சிகளின் வருடாந்திர தணிக்கை அறிக்கைகள் மற்றும் தேர்தல் செலவின அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


70 சதவீத அரசியல் கட்சிகள் மின்னணு வாக்கு எந்திரங்களில் நம்பகத்தன்மை இல்லாததால், தேர்தலில் வாக்களிப்பதற்கான பாரம்பரிய முறைக்கு (வாக்கு சீட்டு) பின்பற்றுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதே கருத்தை பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி), தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி), சமாஜ்வாதி கட்சி, சிபிஐ-எம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.), தி.மு.க., கம்யூனிஸ்ட் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கேரள காங்கிரஸ் மானி (கே.சி.எம்.) போன்ற கட்சிகள் மின்னணு வாக்கு எந்திரங்களில் (EVM) குறித்து கேள்விகளை எழுப்பின. பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் கேள்வி எழுப்பியுள்ளது.


அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்தவுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியதாவது:- இன்று நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகள் வழங்கிய ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படும். அவர்களுக்கு திருப்திகரமான தீர்வு வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.