வங்காளத்தில் 800 மருத்துவர்கள் ராஜினாமா; தொடரும் வேலைநிறுத்தம்; நோயாளிகள் பாதிப்பு
மேற்கு வங்கத்தில் இதுவரை 800 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மருத்துவமனைகளில் அவசர சேவைகள் மட்டுமே தொடர்கின்றன.
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேற்கு வங்கம், பீகார், டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் நீதி வேண்டும் என்ற கோசத்துடன் மருத்துவர்கள் வீதிகளில் வந்துள்ளனர்.
அதே நேரத்தில், எய்ம்ஸ் உட்பட 18க்கும் மேற்பட்ட பெரிய மருத்துவமனைகளில் சுமார் 10,000 மருத்துவர்கள் டெல்லியில் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசுக்கு 48 மணி நேரத்திற்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எங்கள் கோரிக்கையை ஏற்க்கவில்லை என்றால், நாடு முழுவதும் வேலை நிறுத்தப்போரட்டம் நடந்த எங்களை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இதுவரை 800 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். எய்ம்ஸின் மூத்த மருத்துவரின் கூற்றுப்படி, எய்ம்ஸ்-ல் நேற்று (வெள்ளிக்கிழமை) சுமார் 645 சிறு மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. வேலைநிறுத்தம் காரணமாக, அவசரநிலை தவிர பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன. எய்ம்ஸ் போன்ற நாட்டின் பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இதுதான் நிலைமை. சிகிச்சையின்றி நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மருத்துவமனைகளில் அவசர சேவைகள் தொடர்கின்றன. ஆனால் டாக்டர்களின் வேலைநிறுத்தம் காரணமாக OPD மூடப்பட்டுள்ளது என்று நோயாளிகள் கூறுகிறார்கள்.
மேற்கு வங்க கவர்னர் கேசரிநாத் திரிபாதி கொல்கத்தாவில் தாக்குதலுக்கு உள்ளான டாக்டர்களை நேரில் சந்தித்து பேசினார்.
முன்னதாக கடந்த 10 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் முறையாக கண்காணிக்காதது தான் காரணம் எனக்கூறிய இறந்த நோயாளியின் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், பணியில் இருந்த மருத்துவர் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த 10 ஆம் தேதியில் இருந்து அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
ஐந்தாவது நாளாக இன்றும் தொடரும் போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சேவை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டம் மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியேயும் எதிரொலித்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.