பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை போல ‘வாட்ஸ்-அப்’ வலைத்தளத்தையும் பெரும்பாலான பயன்படுத்தி வருகின்றனர். இந்த ‘வாட்ஸ்-அப்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என கதீர் யாதவ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனுவில் கூறப்பட்டது:-


‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலைதளங்களைப் போன்று ‘வாட்ஸ்-அப்’ பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியில் பல்வேறு மாற்றங்களை கடந்த ஏப்ரல் 5-ம் தேதி முதல் ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


இதன்மூலம் ‘வாட்ஸ்-அப்’ வழியாக அனுப்பப்படும் தகவல்களை அனுப்புவோரும், பெறுவோரும் மட்டுமே பார்க்க, படிக்க முடியும். இரு பயனாளிகளுக்கு இடையே பரிமாறப்படும் தகவல்களை ‘வாட்ஸ்-அப்’ நிறுவனமோ மற்ற யாருமோ பெறவோ, படிக்கவோ முடியாது. 


இதனால் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு உளவு நிறுவனங்களால் ‘வாட்ஸ்-அப்’ வழியாக செய்யப்படும் அழைப்புகள், வீடியோ, படங்கள் மற்றும் ஆவணங்களை தேச பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளுக்காக கண்டுபிடிக்க முடியாது.


மேலும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் எனப்படும் அதிநவீன கணினிகளாலும் கூட இந்த உரையாடல்களையோ, ஆவணங்களையோ இடைமறித்து கண்டுபிடிக்க முடியாது. தற்போது ‘வாட்ஸ்-அப்’அறிமுகப்படுத்தியுள்ள 256 பிட் என்கிரிப்ட் எனப்படும் ஒரு சங்கேத குறியீட்டை இடைமறித்து கண்டுபிடிக்க 100 ஆண்டுகள் கூட ஆகலாம். 


இத்தகைய வசதி தீவிரவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் உதவும் வகையில் அமைந்து விடும் ஆபத்து உள்ளது. இது தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே ‘வாட்ஸ்-அப்’ செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான குழு இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு ‘வாட்ஸ்-அப்’ புக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் தொலைத்தொடர்பு விவகாரம்-தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்பாயத்தை அணுகுமாறு சுப்ரீம் கோர்ட்டு மனுதாரரை கேட்டுக் கொண்டு உள்ளது.