பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது - மத்திய அரசு
குறிப்பிட்ட மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என பெகாஸஸ் உளவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இஸ்ரேல் அரசு தயாரித்த பெகாசஸ் எனும் மென்பொருள், பயங்கரவாதிகளின் செல்போன்களை ஹேக் செய்து சதித் திட்டங்களை அறிய வகை செய்யக் கூடியது. இதனை பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு ஆயுதமாக இஸ்ரேல் மற்றும் உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
ஆனால் உலகின் பல நாடுகள் அரசியல் நடவடிக்கைகளுக்காக பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுகேட்ட விவகாரம் உலகை உலுக்கியிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் அரசியல் சூறாவளியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300க்கும் அதிகமானோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக்கேட்கப்பட்டது என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகின. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய பதில் தரக் கோரி நாடாளுமன்றத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக கைகோர்த்து முடக்கின. இதனிடையே பெகாசஸ் ஒட்டுகேட்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் 9 பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு விசாரணையின் போது ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் வழக்கு தொடரக் கூடாது; வலிமையான ஆதாரங்கள் இருக்கிறதா? என உச்சநீதிமன்றம் மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், மத்திய அரசு பதில் தர உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், பெகாசஸ் ஒட்டுகேட்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை; செய்தி ஊடகங்களில் வந்த யூகங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கே தொடரப்பட்டுள்ளது. மேலும் பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் அரசு தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு தமது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என பெகாஸஸ் உளவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR