CAA-வை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?
சட்டப்பேரவையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!
சட்டப்பேரவையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!
சென்னையில் இன்று (27.01.2020) தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மகன் திருமண விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில்., தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவின் அருமை மகனும், மணமகனும், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான தம்பி பிரபாகர் ராஜாவுக்கும், மணமகள் ஹெலன் சத்யாவுக்கும் காலையில் நடந்து முடிந்த திருமணத்தையொட்டி இந்த வாழ்த்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த வாழ்த்தரங்கு நிகழ்ச்சியில், நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்; பெருமைப்படுகிறோம்.
விக்கிரமராஜா அவர்கள், “எங்கள் வீட்டு திருமணத்திற்கு வந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி“ என்று நன்றியுரை ஆற்றுகிற போது குறிப்பிட்டுச் சொன்னார். மன்னிக்க வேண்டும். இது நம்ம வீட்டு திருமணம் என்று குறிப்பிட விரும்புகிறேன். நான் மட்டும் அல்ல, வந்திருக்கும் அத்தனை பேரும் அந்த உணர்வுடன் தான் வந்திருக்கிறோம். நம்முடைய வீட்டில் ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றால், எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன், பெருமையுடன் நாம் அத்தனைபேரும் பங்கேற்று சிறப்பிக்கிறோமோ, அதற்குக் கிஞ்சித்தும் குறைந்துவிடாமல் அதைவிட அதிகமாக மகிழ்ச்சியுடன் பங்கேற்று இந்த விழாவில் கதாநாயகன் - கதாநாயகியாக அமர்ந்திருக்கின்ற மணமக்களை நாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜாவின் பெருமைகளையெல்லாம் நான் உங்களிடம் அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரைப் பற்றி முழுமையாக, தெளிவாக, உணர்வுப்பூர்வமாகத் தெரிந்தவர்கள் - புரிந்து கொண்டவர்கள் நீங்கள். விக்கிரமராஜா என்னிடத்தில் மட்டுமல்ல. நம் தலைவர் கலைஞரிடத்திலும் அதிகமான நெருக்கத்தைப் பெற்றிருந்தவர்.
தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், அவர் பலமுறை தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தது உண்டு. கோட்டையிலும் வந்து சந்திப்பார். வீட்டிலும் வந்து சந்திப்பார். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தவர் விக்கிரமராஜா அவர்கள்.
முதலமைச்சர் என்றால், அதற்கான நேரம்-காலம் அப்பாயிண்ட்மெண்ட் போன்றவற்றைக் குறித்துக் கொண்டுதான் வரவேண்டும். தலைவர் கலைஞர் அவர்கள் 10 பேருக்கு அப்பாயிண்ட்மெண்ட்டே கொடுக்க மாட்டார். அவர்கள் எந்த நேரத்திலும் கலைஞரைச் சந்திக்கலாம் என்பதற்காகவே அப்படிச் செய்வார். அதில் விக்கிரமராஜாவும் ஒருவர். அந்தளவிற்கு உரிமையை அவர் பெற்றிருந்தார். அந்தளவிற்கு உரிமையைத் தலைவர் கலைஞர் அவர்களும் விக்கிரமராஜாவுக்கு வழங்கியிருந்தார்.
பலரும் அவர்களது சொந்தப் பிரச்சனைகள், சங்கடங்களைத் தான் கலைஞரைச் சந்திக்கும் போது சொல்வார்கள். குறிப்பிட்ட சிலர் மட்டுமே பொதுமக்களின் பிரச்சனைகள், பொதுவான பிரச்சனைகளைச் சொல்வார்கள். தனிப்பட்ட முறையில் விக்கிரமராஜா அவர்கள் எந்தப் பிரச்சனைகளையும் தலைவர் அவர்களிடத்தில் சொன்னதில்லை. வணிகர்கள், வியாபாரிகள், மக்கள் பிரச்சனைகள், நாட்டுப் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி, நூற்றுக்கு 99 சதவிகிதம் வெற்றி பெற்றவர் தான் நம்முடைய விக்ரமராஜா என்று நான் பெருமையுடன் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
முடியாத காரியம் என்றாலும் அதை முடிக்கின்ற தொனியில் தான் பேசுவார். அதுதான் அவருடைய திறமை. அழுத்தம் திருத்தமாக எடுத்துப் பேசுவார். அது ஜிஎஸ்டி-யாக இருந்தாலும், வியாபாரிகளுக்கு ஏற்படக்கூடிய எந்தச் சங்கடங்களாக இருந்தாலும் சரி, அதில் குறிப்பாக டீக்கடை போன்ற சிறு கடைகளை வைத்திருக்கும் சிறு வணிகர்கள் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் நம்முடைய விக்கிரமராஜா அவர்கள்.
மாவட்டச் செயலாளர் அன்பழகன் பேசும் போது ஒரு செய்தியைக் குறிப்பிட்டுச் சொன்னார். அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட் போடுகிற போது, வரியைத் தள்ளுபடி செய்வார்கள். இல்லையென்றால் வரியை ரத்து செய்வார்கள். வரியைக் குறைப்பார்கள் அல்லது அதிகப்படுத்துவார்கள்.
தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில், ஒவ்வோர் ஆண்டும் வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து, பட்ஜெட் போடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு கலந்து பேசி, வரி போடலாமா - குறைக்கலாமா? என்று யோசித்து, அதன்பிறகுதான் சட்டமன்றத்தில் நிதிநிலையை அறிக்கையைத் தலைவர் கலைஞர் சமர்ப்பிப்பார் என்பது வரலாறு.
ஆனால் இப்போது இருக்கும் இந்த ஆட்சி அந்த முறையைக் கையாள்கிறதா? கிடையாது. அதைப் பற்றிக் கவலைப்படுவதும் கிடையாது. 'வியாபாரம்' செய்வதற்காகவே ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வியாபாரம் என்றால் நியாயமான வியாபாரம் இல்லை. கொள்ளையடிக்கிற, கமிஷன் வாங்குகிற, லஞ்சம் வாங்குகிற வியாபாரம். அரசியல் அதிகம் பேச விரும்பவில்லை. விக்கிரமராஜா அவர்கள் பொது அமைப்பான வணிகர் சங்கத்தின் தலைவர் என்பதால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவருக்கு வேண்டும். அதில் முக்கியமாக திராவிட முன்னேற்றக் கழகம் வேண்டும் என்று கருதுகிறார் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இல்லையென்றால் என்னை அழைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துவாரா? அவருடைய மகனுக்கு கழகத்தின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் வாய்ப்பு இன்றைக்கு கிடைத்திருக்குமா? அவர் பொறுப்பேற்று இருக்கிற பதவி என்பது பொதுவானது. ஆனால், அவருக்குள் ஓடுவது திமுக ரத்தம் தான். அதை யாராலும் மாற்ற முடியாது. அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்திருக்கிறார்.
ஆலயத்தில் சடங்கின் அடிப்படையில் திருமணத்தை நடத்தியிருந்தாலும், வாழ்த்தரங்கு நிகழ்ச்சி என்ற ஒன்றை நடத்தி அதில் நீங்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்று சொல்லி, வேலு அவர்கள், சுபவீ அவர்கள், தங்கபாலு அவர்கள், தயாநிதி மாறன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இன்றைக்கு வாழ்த்த வைத்திருக்கிறார் என்றால், அவரது விருப்பத்திற்கு அதுவே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது
இப்போது நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தயார் செய்கின்ற நேரத்தில் வணிகர் சங்கத்தை மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், சிறு-குறு தொழிலதிபர்கள், வணிகப் பெருமக்கள், வியாபாரிகள் என்று எல்லாத் தரப்பு மக்களையும் அழைத்துப் பேசி அதற்குப் பிறகு தான் நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து, வெளியிடுகிற ஒரு உன்னதமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியைத் தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தினார் என்பது வரலாறு. ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை.
தயாநிதி மாறன் அவர்கள் பேசும் போது மணமக்களுக்கு அறிவுரை கூறினார். மணமகன் வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். அவருடைய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார். அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பது என்னுடைய அனுபவம். அதேநேரத்தில் மணமகளையும் அமைதியாக இருக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய-மாநில அரசைப் போல அமைதியாக ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கக்கூடாது. கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்பது தான் நம்முடைய உரிமை. ஆண்-பெண் சமம். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில், சீர்திருத்த மாநாட்டை நடத்தி எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்று, பெண்களுக்கான சம உரிமையைத் தந்தை பெரியார் அவர்கள் பெற்றுத் தந்தார்கள். அப்படிப்பட்ட தந்தை பெரியாரைப் பற்றி இப்போது விமர்சனம் செய்கின்ற சூழ்நிலை உள்ளது. பெரியார் இறந்து இவ்வளவு காலம் ஆன பிறகும் அவரைைைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள் என்றால் அது தான் அவரது பெருமைக்குச் சான்று.
மத்திய அரசு மதத்தின், ஜாதியின் பெயரால், மக்களைப் பிளவுபடுத்தும் கொடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டு வரும் நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றைக் கொண்டு வந்து நிறைவேற்றும் நிலை வந்திருக்கிறது. அதைத் தட்டிக் கேட்கிற நம்முடைய சுயமரியாதை, உரிமை பறிக்கப்படக் கூடிய நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் நிம்மதியாக நாட்டில் வாழ முடியுமா?
பக்கத்தில் இருக்கும் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முதலமைச்சர் எதிர்த்து தீர்மானம் போடப்போகிறோம் என்று சொல்கிறார். கேரள மாநிலத்தில் எதிர்க்கட்சியும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தேசியக் குடியுரிமைச் சட்டத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த போது நாடாளுமன்றத்தில் ஆதரித்த தெலுங்கானா மாநிலமும் எதிர்க்கத் தொடங்கிவிட்டது. பிஜேபி-உடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமார் கட்சி ஆதரித்து ஓட்டு போட்டது. அவரும் இப்போது எதிர்க்கிறார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதுமே எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எதிர்க்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி இருந்து வருகிறது. இந்த லட்சணத்தில் 'நான் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன், விருதுகள் எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்' என்கிறார் எடப்பாடி.. விருது தந்தவர்களைத்தான் முதலில் கேட்க வேண்டும். நம்முடைய உரிமையைத் தட்டிப் பறிக்கக் கூடிய நிலை. உரிமை பறிபோய் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை இல்லை.
ஏற்கனவே சட்டமன்றத்தைக் கூட்டியபோது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஒரு தனிநபர் தீர்மானத்தை எழுதிக் கொடுத்தேன். 5 நாட்கள் சட்டமன்றம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கேட்டபோது சபாநாயகர் ஆய்வில் இருப்பதாக கூறி, எடுத்துக் கொள்ளவே இல்லை. இப்போதும் கேட்கிறேன். நீங்கள் ஆதரித்து ஓட்டு போட்டீர்கள். அதிமுகவின் 11 எம்.பி.க்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு எம்.பியையும் சேர்த்து 12 எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டீர்கள். அதனால்தான் இந்த சட்டமே நிறைவேறியது. இப்போது நாடே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால், தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமைச்சரவை கூடிக் கலந்து பேசி தீர்மானம் போடவேண்டும். நீங்கள் எவ்வளவுதான் அயோக்கியத்தனம், கொள்ளை, கொலை, ஊழல் செய்திருந்தாலும் - இந்த்த் தீர்மானத்தை நிறைவேற்றினால், நானே மனமுவந்து உங்களைப் பாராட்டத் தயாராக இருக்கிறேன். உங்களுக்கு நன்றி சொல்லவும் தயாராக இருக்கிறேன். அந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? போடமாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு மணக்கோலத்தில் இருக்கும் தம்பி பிரபாகர் ராஜா அவர்கள், ஒரு இளைஞர். நான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது அந்த பொறுப்பில் இருந்து வந்தவர்தான். அதற்கு பிறகு என்னுடைய மகன் உதயநிதிஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மிகச்சிறப்பாக பணியாற்றுவதாக அவர் தந்தையே தட்டிக் கொடுக்கிறார். ஒரு மகனை தந்தை பாராட்டுவது சாதாரண விஷயம் இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் என்னையும் பாராட்டி இருக்கிறார். அது உங்களுக்குத் தெரியும். அதுபோல் அவரை அவரது தந்தையே பராட்டி இருக்கிறார். அவருடைய தந்தை மட்டும் அல்ல நாங்களும் தம்பி பிரபாகரை பாராட்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.