கண்ட்வா: மாவட்ட தலைமையகத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள கால்வா காவல் நிலையப் பகுதியில் லாக்டவுன் காரணமாக பணம் சம்பாதிக்க முடியாமல் இருந்த 38 வயதான ரமேஷ் என்ற நபரை தடியால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது மாமியார் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்கலா கிராமத்தில் வசித்த ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மாமியார் பிரேமாபாய் மற்றும் மனைவி லீலாபாய் ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கால்வா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதேஷ்யாம் சவுகான் தெரிவித்தார்.


கொலை செய்யப்பட்ட ரமேஷ், கார்கலா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்ததாக இன்ஸ்பெக்டர் ராதேஷ்யாம் தெரிவித்தார். மே 24ஆம் தேதி, அவரது மனைவி அவரை வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்குமாறு கூறினார். ஆனால் லாக்டவுன் காரணமாக உதவியற்ற ரமேஷ் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறினார். இதையடுத்து ஆத்திரமடைந்த அவரது மனைவி லீலாபாய், தனது கணவனுடன் சண்டையிட்டு அவரது தலையில் தடியால் தாக்கினார். இதற்கிடையில், ரமேஷின் மாமியார் பிரேமாபாய் தனது மகளுடன் இணைந்து ரமேஷைத் தாக்கினார்.


ரமேஷை கொடூரமாக தாக்கிய பிறகு, அவரை கவனித்து கொள்ளாமல் லீலாபாய் காவல் நிலையத்திற்கு வந்து தனது கணவர் ரமேஷ் மீது தன்னைத் தாக்கியதாக புகார் அளித்தாக இன்ஸ்பெக்டர் ராதேஷ்யாம் தெரிவித்தார்.


காயமடைந்த ரமேஷ் ஜாமண்யா குர்த் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரர் தீபக்கிற்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தீபக் தனது தாயுடன் கார்கலா கிராமத்தை அடைந்து காவல்துறையின் உதவியுடன் ரமேஷை மீட்டு கால்வாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர், ரமேஷின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் உடனடியாக காண்ட்வாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கால்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ​​ரமேஷ் காவல்துறைக்கு அளித்த புகாரில், அவரது மனைவி லீலாபாய் மற்றும் மாமியார் பிரேமாபாய் ஆகியோரால் தாக்கப்பட்ட முழு சம்பவத்தையும் கூறினார். இறந்தவரின் புகாரின் அடிப்படையில், லீலாபாய் மற்றும் பிரேமாபாய் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர் ராதேஷ்யாம் தெரிவித்தார்.


(மொழியாக்கம்: தமிழ்ச் செல்வன்)