மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், கெஜ்ரிவாலுக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானிக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை அரசே கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கூறியுள்ளது. இதனையடுத்து கெஜ்ரிவாலை ஏழையாக கருதி பணம் வாங்காமல் ஆஜராக தயாராக உள்ளதாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜெட்லி இருந்த போது, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதனையடுத்து டில்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார். தனக்கு இழப்பீடாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என ஜெட்லி கூறினார். இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாதாட போவதாகவும், இதற்காக பணம் வாங்க மாட்டேன் என மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறினார். இதன்படி வழக்குகளில் முதலில் ஆஜரான ராம்ஜெத்மலானி, பின்னர் பணம் கேட்டு கெஜ்ரிவாலுக்கு பில்களை அனுப்பினார்.


வழக்கு விவரங்களை கவனித்ததற்காக ரூ.1 கோடியும், ஒவ்வொரு முறையும் ஆஜரானதற்காக தலா ரூ.22 லட்சம் கேட்டு ராம்ஜெத்மலானி பில் அனுப்பினார். கெஜ்ரிவாலுக்காக ராம்ஜெத்மலானி 11 முறை கோர்ட்டில் ஆஜரானார். இதனால் ரூ.3.42 கோடி ஜெத்மலானிக்கு வழங்கப்பட வேண்டும்.


அருண் ஜெட்லி மீது கெஜ்ரிவால் முதல்வராக இருந்து தான் புகார் கூறினார். இதனால், இந்த பணத்தை அரசு வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும் என கவர்னர் அனில் பைஜ்வாலுக்கு துணை முதல்வர்மணிஷ் சிசோடியா அறிக்கை அனுப்பினார். இது குறித்து கவர்னர், சட்ட நிபுணர்களின் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த தகவல் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறுகையில், நான் பணக்காரர்களிடம் மட்டும் தான் பணம் வாங்கி கொண்டு கோர்ட்களில் ஆஜராவேன். ஏழைகளிடம் பணம் வாங்காமல் ஆஜராவேன். எனது கட்சிகாரர்கள் 90 சதவீதம் பேர் ஏழைகள் என்பதை நாடறியும். கெஜ்ரிவாலுக்கு பணம் வாங்காமல் ஆஜராவேன் என அவரிடம் கூறினேன். ஆனால், பணம் கட்டுகிறேன். பில் அனுப்புமாறு கெஜ்ரிவால் தான் என்னை வலியுறுத்தினார். இதனால், பணம்கேட்டு அனுப்பினேன். தற்போதும், அரசு எனக்கு பணம் கொடுக்க விரும்பவில்லை என்றால், கெஜ்ரிவாலுக்காக இலவசமாக ஆஜராவேன். நான் அவரை ஏழை கட்சிகாரராக கருதிக்கொள்கிறேன். 


இவ்வாறு அவர் கூறினார்.