வங்கிகள் இணைப்பால் வேலை இழப்பு ஏற்படுமா? உண்மை நிலை என்ன?
பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்படாது என மத்திய நிதி துறை செயலாளர் ராஜிவ்குமார் தெரிவித்துள்ளார்!
பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்படாது என மத்திய நிதி துறை செயலாளர் ராஜிவ்குமார் தெரிவித்துள்ளார்!
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். இந்த அறிவ்விப்பின் படி 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு, 4 வங்கிகளாக மாற்றப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது 4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வேலையிழப்பு ஏற்படும் என்று சில வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதற்கு பதிலளித்துள்ள நிதி துறை செயலாளர் ராஜிவ்குமார், வங்கி பெரிதாகும் போது, தொழிலும் வளர்ச்சியடையும் என குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் வேலைவாய்ப்பு உருவாக வழிவகுக்குமே தவிர, வேலையிழப்பு ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் பரோடாவுடன் வங்கிகள் இணைக்கப்பட்ட போதிலும், வேலையிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டுவதற்கு, பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவது அவசியமானது என்று குறிப்பிட்ட அவர், வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால், சிறிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சிறிய நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு விபரம்., பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைட்டட் வங்கி ஒன்றாகவும், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் ஒன்றாகவும், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது.