இந்தியாவுக்கு எதிரான தனது கொடூரமான பிரச்சாரத்தை ஒரு வினோதமான விளம்பரத்தில் பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் கராச்சியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படையின் போர் அருங்காட்சியகத்திற்குள், பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் பத்திரிகையாளரும் அரசியல் வர்ணனையாளருமான அன்வர் லோதி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதனை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த படத்தை பகிர்ந்துக்கொண்ட லோதி இதுகுறித்து பகிர்கையில்., "அபி நந்தனின் மேனெக்வினை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளது. அவரது கையில் ஒரு தேனீர் கோப்பை கொடுத்திருந்தால், இந்த காட்சி மேலும் சுவாரஸியமானதாக இருந்திருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.




இந்திய விமானப்படையின் துணிச்சலான மனிதனின் இத்தகைய புகைப்படம் தற்போது நாட்டு மக்களின் கோபத்தினை பெற்றுள்ளது.


"இந்த ஆண்டு பிப்ரவரியில் பாக்கிஸ்தான் இராணுவம் அபிநந்தன் காவலில் இருந்தபோது வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமானப்படை விமானி தேநீர் அருந்துவதைக் காணலாம், ஒரு கட்டத்தில் அவர் சிறைபிடிக்கப்பட்டவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது "தேநீர் அருமை உள்ளது, நன்றி" என குறிப்பிட்டிருந்தார். இந்த காட்சியை நினைவூட்டும் விதமாக லோதியின் பதிவு உள்ளது.


முன்னதாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உலகக் கோப்பை போட்டிக்கு சற்று முன்னர், பாகிஸ்தான் தொலைகாட்சி ஒன்றில் வெளியான விளம்பரத்தில் அபிநந்தன் மீது வெறுக்கத்தக்க மோசடி இடம்பெற்றது, இது சமூக ஊடகங்களில் கடும் பின்னடைவுக்கு ஆளானது. இந்த விளம்பரம் IAF விமானி சிறைபிடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவின் அடிப்படையிலும், அபிநந்தன் உள்பட இந்தய படை வீரர்களை கேலி செய்வது போன்றும் இருந்தது. இந்த விளம்பரத்திற்கு அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது, இந்நிலையில் தற்போது இதோப்போன்று மேலும் ஒரு இழிவான செயலில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.


ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இதனிடையே தற்போது இந்த கீழ்தரமான செயல் மூலம் பாகிஸ்தான் அரசு இந்தியா மீதான காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதாக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


குறிப்பு: இந்தாண்டு துவக்கத்தில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த எப்-16 ரக விமானத்தை இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தைக் கொண்டு தாக்கி அழித்தார். இந்த அதிரடி நடவடிக்கையின் போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் பாராசூட் மூலம் இறங்கிய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்தனர். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் படையின் பிடியில் ரத்தக் காயங்களுடன் அபிநந்தன் காணப்பட்ட வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.