பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மக்களவை தொடங்கியதும் புதிய மந்திரிகளை  பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது,குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து சதிதிட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார். இவ்விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, புதிய மந்திரிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், அவை நடவடிக்கை தொடங்கியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சந்தித்ததாக பிரதமர் மோடி பேசியது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மன்மோகன் சிங் குறித்து பேசியதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தனர்.


எதிர்க்கட்சியின் இந்த நோட்டீஸை மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டார். 


இதனைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால், அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது. அதன்பின்னர், சரத்யாதவ் தகுதி நீக்கம் தொடர்பாக சில உறுப்பினர்களும் பேச முயற்சித்தனர். இதனால் மீண்டும் குழப்பம் நிலவியது. இதுபோன்ற காரணங்களால் அவை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் முதலில் 12 மணி வரை அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.


இது தொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,


“நாங்கள் நோட்டீஸ் வழங்கினோம், ஆனால் சபாநாயகர் அவையை ஒத்திவைத்துவிட்டார், எங்களை இப்பிரச்சனையை எழுப்ப அனுமதிக்கவில்லை. எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும். இது தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனையாகும்,”என கூறினார். பாகிஸ்தானுடன் சதிதிட்டம் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.


அதை தொடர்ந்து, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை முதல்நாளே ஒத்திவைக்கப்பட்டது.