போர் நடவடிக்கைகளில் பெண்கள்: பிபின் ராவத் கருத்து
போர் நடவடிக்கையில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி:-
ராணுவத்தில் பெண்களை ஜவான்களாக மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருகிறேன். இது தொடர்பான நடவடிக்கை விரைவில் துவங்கும். முதலில் ராணுவத்தில் பெண்கள், போலீஸ் ஜவான்களாக பணியமர்த்தப்படுவார்கள். பெண்களை ஜவான்களாக தேர்வு செய்வது குறித்து அரசுடன் ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது ராணுவத்தில், மருத்துவம், சட்டம், கல்வி, சிக்னல் மற்றும் பொறியியல் பிரிவு உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளில் மட்டுமே பெண்கள்தேர்வு செய்யப்படுகின்றனர். போர் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை. ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, பிரிட்டன், தாய்லாந்து, பின்லாந்து, பிரான்ஸ், நார்வே, சுவிடன் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பெண்கள் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்திய விமானப்படையில் முதன்முறையாக போர் விமான பைலட்களாக 3 பெண்கள் கடந்த வருடம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.