பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னர் கர்நாடகாவில் அரசாங்கத்தை அமைப்பதாக கூறி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திப்பதாக கர்நாடக பாஜக தலைவர் பி எஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் நிலவி வந்த அரசியல் சச்சரவுகளுக்கு இடையில் நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. இதனையடுத்து ஊடகங்களிடம் எடியூரப்பா தெரிவிக்கையில் "நான் பிரதமர் மற்றும் அமித் ஷா ஜி ஆகியோருடன் கலந்துரையாடுவேன், பின்னர் நான் சென்று ஆளுநரை சந்திப்பேன். அதற்கு முன் நாங்கள் இப்போது ஒரு சட்டமன்றக் கட்சி கூட்டத்தை நடத்தப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



மேலும் இதுதொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா செவ்வாயன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு எழுதியுள்ள கடிதத்தில்., "தனது முயற்சிக்கு, தாங்கள், தங்கள் கட்சியின் தலைமை, மற்ற தலைவர்கள் வழங்கிய ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றி கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சிகளின் 15 MLA-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.


மேலும் 2 சுயேட்சை MLA-க்களும் குமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு MLA நடுநிலை வகிப்பதாக தெரிவித்தார்.


17 MLA-க்களின் ஆதரவை இழந்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பலம் 101-ஆக குறைந்தது. குமாரசாமி தலைமையிலான ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்ட நிலையில், இன்று சட்டசபை கூடியது.


கூட்டத்தின் போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகளும். அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்வதாக அறிவிக்கப்பட்டது. குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததால், எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.