இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளின் கீழ் YES வங்கி கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதன் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததாக அவதூறு பேசியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "இனி YES வங்கி இல்லை. மோடியும் அவரது கருத்துக்களும் இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்துவிட்டன" என்று பதிவிட்டுள்ளார்.


நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் YES வங்கி நிர்வாகத்தை இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் எனவும், இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ரூபாய் 50,000 வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து ராகுல்காந்தியின் ட்விட் வெளியாகியுள்ளது.



முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் நிதி நிறுவனங்களை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனை அம்பலப்படுத்தியதாகக் கூறினார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "பாரதீய ஜனதா கட்சி ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. நிதி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவர்களின் திறன் அம்பலமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில்., "முதலில், அது PMC வங்கி. இப்போது அது YES வங்கி. அரசாங்கத்திற்கு அக்கறை இருக்கிறதா? அதன் பொறுப்பைக் கைவிட முடியுமா? இல்லை வரிசையில் மூன்றாவது வங்கி இருக்கிறதா?" என்று மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.


  • YES வங்கியின் நெருக்கடி என்ன?


ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை YES வங்கியை ஒரு தடைக்கு உட்படுத்தியது மற்றும் YES வங்கி வைப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு கணக்கிற்கு ரூ.50,000-க்கு மேல் திரும்பப் பெற அனுமதிக்க மாட்டாது என்றும் முடிவு செய்தது. இருப்பினும், திருமணம், சுகாதார அவசரநிலை போன்ற நோக்கங்களுக்காக, விதிவிலக்குகள் செய்யப்படலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கை மூலம் வங்கி தனது 20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான சம்பளத்தையும், வாடகைகளையும் செலுத்த முடியும் என்று அது தெளிவுபடுத்தியது. இது தவிர, YES வங்கியால் எந்தவொரு கடனையோ அல்லது முன்கூட்டியே வழங்கவோ புதுப்பிக்கவோ, எந்த முதலீட்டையும் செய்யவோ, எந்தவொரு பொறுப்பையும் செலுத்தவோ அல்லது எந்தவொரு கட்டணத்தையும் வழங்க ஒப்புக்கொள்ளவோ ​​முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.