உத்தரபிரதேச முதல் மந்திரியாக மடாதிபதி யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார். லக்னோவில் இன்று அவர் பதவி ஏற்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. 


மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, கோரக்பூர் எம்.பி., யோகி ஆதித்யநாத், மத்திய தொலைதொடர்புதுறை மந்திரி மனோஜ் சின்கா உள்ளிட்ட பலரது பெயர்கள் பலமாக அடிபட்டன. கட்சித் தலைமை, உத்தரபிரதேச முன்னணி தலைவர்களுடன் ஒரு வார காலத்துக்கு மேலாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது.


இந்நிலையில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், லக்னோவில் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. 


இதில் மேலிட பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடுவும், பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவும் கலந்து கொண்டனர். அவர்களுடன் மாநில பாஜக பொறுப்பாளர் ஓம் மாத்தூர், மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, தேசிய இணை அமைப்புச்செயலாளர் சிவ பிரகாஷ், மாநில பொதுச்செயலாளர் சுனில் பன்சால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


இதில் சட்டசபை பாஜக தலைவராக 44 வயதான மடாதிபதி யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பெயரை மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா முன்மொழிந்தார். அவர் உத்தரபிரதேசத்தின் 32-வது முதல்வர் ஆவார். 


முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதை கட்சியின் மூத்த தலைவர்கள், கவர்னர் ராம்நாயக்கை சந்தித்து தெரிவித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத்தை ஆட்சி அமைக் குமாறு கவர்னர் ராம்நாயக் முறைப்படி அழைப்பு விடுத்தார்.


லக்னோவில் உள்ள கன்ஷிராம் ஸ்மிரிதி உப்வானில் இன்று உத்தரபிரதேசத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கும், துணை முதல் மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் மந்திரிகளுக்கும் கவர்னர் ராம்நாயக் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.


இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.