புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் ; உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் இருந்து ஸ்ரீநகருக்கு பாதுகாப்பு படை வீரர்கள் 70 வாகனங்களில் சென்றனர். அந்த வாகன அணிவகுப்பு  புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தின் அருகே சென்றது. அப்போது எதிரே மெதுவாக வந்த காரில் இருந்த பயங்கரவாதி, வாகன அணிவகுப்பில் வந்த இரு பேருந்துகளுக்கு இடையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி வெடிக்க வைத்தான். இதில் பாதுகாப்பு படை வாகனங்கள் வெடித்து சிதறின.


வாகனத்தில் பயணம் செய்த வீரர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் சாலையில் விழுந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் காயமடைந்து துடித்துக் கொண்டிருந்த வீர ர்களை குறி பார்த்து துப்பாக்கியால் சுட்டனர். இதனை கண்டதும், அணி வகுப்பில் சென்ற ஏனைய வாகனங்களும் நிறுத்தப்பட்டன. அதில் இருந்து வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. தற்போது வரை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 


இந்நிலையில், பல கனவுகளோடு இருந்த, தாக்குதலில் வீரமரணம் அடைந்த எமது வீரர்களின் கனவுகளை கலைய விட மாட்டோம் என பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி  செலுத்தினார். பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலால் இந்திய மக்களின் ரத்தம் கொதித்துப் போயுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது மிகவும் உணர்ச்சிவசமான நேரம் எனக் கூறினார்.


இதை நாடு ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதை உலக அரங்கிற்கு உணர்த்த வேண்டும் என்றும், அரசு தரப்பாக இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையாக இருந்தாலும் அரசியலாக்கக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என அண்டை நாடு நினைத்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.


தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து, இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மோடி, தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றார். தீவிரவாத இயக்கங்களும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும் மிகப்பெரிய தவறை செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். உலக அரங்கில் தனிமைப்பட்டுப் போயுள்ள பாகிஸ்தான், இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என நினைத்தால், அதற்கு மிகப்பெரிய விலையை அந்நாடு கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் பிரதமர் எச்சரித்தார்.


தீவிரவாதம் அடியோடு நசுக்கப்படும் எனக் குறிப்பிட்ட மோடி, ராணுவ படைகளுக்கு முழுசுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வீரத்தில் முழுநம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். தீவிரவாதத் தாக்குதால் நாடே கடுங் கோபத்தில் உள்ளதை தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.