ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடை பெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.


அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.


அதேபோன்று, சிரியாவில் 2012 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இருப்பினும், அங்கு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் வசிக்கும் இடங்களின் மீது சிரியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.


இதில், பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து உலகமே கலங்கியது.


இதை தொடர்ந்து, சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினரும் அந்நாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆப்கானிஸ்தான் அரசும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. 


இந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பல்கலைக்கழகம் மற்றும் அலி அபத் மருத்துவமனை ஆகியவற்றிற்கு அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.  


இதுவரை இந்த தாக்குதல் குறித்து எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இது தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.