திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது.....!


"எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்களாகிய உங்களுக்கு படிப்பு  மிக மிக முக்கியம். ஆனால் அதைவிட அரசியல் மிகவும் முக்கியம். அரசியல்வாதியாக ஆக வேண்டாம். அரசியலை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அரசியல் புரிந்து, தெரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும். நான் செய்ய வேண்டியதை நானும், நீங்கள் செய்ய வேண்டியதை நீயும் செய்யும் நேரம் வந்துவிட்டது. 


படிப்பு முடித்து வந்தவுடன் உங்களை தாக்கப்போவது அரசியலும் ஊழலும் தான். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும்" என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதை தொடர்ந்து, "நான் கல்லூரிக்கும், பள்ளிகளுக்கும் செல்லவிடாமல் பல்வேறு தடைகள் வருகின்றன. அதையெல்லாம் எதிர்த்து தான் நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். என்னை வேலை செய்யாமல் தடுக்கும் இவர்களை நான் வேடிக்கை மனிதர்களாகவே பார்க்கிறேன். போருக்கு செல்பவருக்கு பதற்றமும், பயமும் இருக்காது. எனக்கும் அப்படிதான்.


நீங்கள் எனக்கு அளித்த புத்தகங்கள் எனது நூலகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்படும். மன நூலகத்தில் இந்த விழாவுக்கும் தனி இடம் இருக்கும். எங்களது கட்சியில் பொன்னாடை, பூமாலை, காலில் விழுவது போன்ற முறைகள் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்" என்றார். 


தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கையில், "நீட் தேர்வு குறித்து, மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்குமே அல்ல. நம் வீட்டுப்பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை நாம்(தமிழ்நாடு) தான் தீர்மானிக்க வேண்டும். 


கிராமியமே தேசியம். விவசாயிகள் பிரச்சனையில் தன்னுடைய பயிருக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு கொடுத்தாலே அவர்களின் பெரும்பாலான பிரச்னை தீர்க்கப்பட்டு விடும். படிப்படியாக செய்ய வேண்டிய வேலையிது. 


திராவிடம் என்பது இந்தியா நாடு முழுவதுமாக தழுவியது. திராவிடம் இந்தியா முழுவதும் கலந்துள்ளது. அதை ஒழிக்க முடியாது" என்றார்.