கத்துவா கற்பழிப்பு வழக்கை விசாரிக்கும் தீபிகா-விற்கு கொலை மிரட்டல்!!
காஷ்மீரின் கத்துவா பகுதி சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் பெண் வழக்கறிங்கருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவர் தப்பிக்க உதவிய காவல் அதிகாரி உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைதாகியுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், அந்த பேரணியில் கலந்துகொண்ட இரண்டு பா.ஜ.க. மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காஷ்மீர் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதி சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜவத், தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த வழக்கை விசாரிக்கும் நான் தனிமைப்படுத்தப் படுகிறேன். நான் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம். கொலையும் செய்யப்படலாம். நீதிமன்றத்தில் பயிற்சி செய்ய என்னை அனுமதிப்பதில்லை. இதுகுறித்து சுப்ரிம் கோர்ட்டில் முறையீடு செய்யப் போகிறேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என தெரிவித்துள்ளார்.