தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உதவ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...!


வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்வேறு மாணவர்கள் நீட் தேர்வு எழுத கேரளா வர இருப்பதால், அவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் சிறப்பாக இருக்கத் தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், எர்ணாகுளத்தில் அமைக்கப்பட்ட அனைத்து உதவி மையங்களும் செயல்பட தொடங்கின என்றும் உதவிக்கு 90615 18888 எண்ணுக்கு வாட்ஸ் அப், குறுஞ்செய்திகளை அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார். 


அதிலும் சிறப்பாக தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரும் ஒவ்வொரு உதவி மையத்தில் இருப்பார். அவருடன் சேர்த்து, ஒவ்வொரு மையத்திலும் 10 பேர் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சமூகவலைத்தளங்களில் பல்வேறு குறைகள் பட்டியலிடப்படுவதாகவும், ஒருவேளை பிரச்னைகள் இருந்தால் cmo.kerala.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம் என்றும் கேரள முதலமைச்சரின் அலுவலக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.