வங்கிக் கணக்கு, SIM கார்டு-க்கும் ஆதார் அவசியம்: அமைச்சரவை ஒப்புதல்!
வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதார் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆதாரை சுய விருப்பத்தில் அடையாள சான்றாகப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பான மசோதா கடந்த ஜனவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. அதற்குள் நாடாளுமன்றக் கூட்டம் நிறைவு பெற்றதை அடுத்து அவசர சட்டமாகவே அது அமல்படுத்தப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொலைத் தொடர்பு சட்டத்தின் படி வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதார் அட்டையை தொடர்ந்து சுயவிருப்பத்தின் பேரில் அடையாள ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆதார் இல்லை என்பதற்காக யாருக்கும் எந்த வித சேவையும் மறுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதற்கான சட்ட திருத்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆதாரைப் பயன்படுத்தும் போது தனிநபர் விவரங்களை பாதுகாப்பதற்கான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். விதிகளை மீறுவோருக்கு ஒருகோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூடுதலாக தினம் பத்துலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாம் நபருக்கு ஆதார் தொடர்பான விவரங்களை வழங்கினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். பயோமெட்ரிக் தகவலாக ஆதார் விவரங்களை சேகரிக்கக் கூடாது என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.