காலணிகள் வாங்கிய நுகர்வோரிடம், துணிப் பைக்கும் சேர்த்து பணம் வசூல் செய்த விவகாரத்தில், பிரபல காலணி நிறுவனமான பாட்டா நிறுவனத்துக்கு 9000 ரூபாய் அபராதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் ரதிரி என்பவர் அங்குள்ள பாட்டா நிறுவனத்தில் காலணிகள் வாங்கியுள்ளார். அப்போது, காலணிகளை எடுத்துச் செல்வதற்கான துணிப் பைக்கும் சேர்த்து 3 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அந்த நபர், அங்குள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தொடுத்துள்ளார். `பேப்பர் பையில் பாட்டாவின் பிராண்டை விளம்பரப்படுத்தும் விதமாக அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு நான் ஏன் காசு தர வேண்டும்’ என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.


`வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகப் பை வழங்க வேண்டும் என்பதே முறை. சுற்றுச்சூழல்மீது அக்கறை உடைய நிறுவனம் என்றால் பாட்டா பேப்பர் பைகளை இலவசமாகக் கொடுத்திருக்க வேண்டும். எனவே, பாட்டா நிறுவனம், நுகர்வோரின்  3 ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டும். அதனுடன், இந்த வழக்குக்கு அவர் செலவு செய்ததற்கு இழப்பீடாக 1000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சல் கொடுத்ததற்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டும். மாநில நுகர்வோர் மறுவாழ்வு ஆணையத்தின் சட்ட உதவி கணக்கில் ரூ.5,000 அபராதமாகச் செலுத்த வேண்டும். ஆக மொத்தம் ரூ.9000 பாட்டா நிறுவனம் அபராதமாகச் செலுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், பொருட்களை வாங்கும் நுகர்வோர்களுக்கு இலவசமாக துணி பைகளை வழங்குமாறும் அந்நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது.