நிதி இழப்பை சந்தித்து வரும் ஏர் இந்தியா, நிதி இழப்பினை சமாளிக்க தனது ஊழியர்களின் தலையில் கைவைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர் இந்தியா கடும் நிதி இழப்பை சந்தித்து வருகிறது. எனவே அதன் ஐந்து துணை நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை விற்க மத்திய அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்தது. எனினும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை.


இதனையடுத்து நிதி இல்லாதால் கடந்த மே மாத சம்பளத்தினை ஏர் இந்தியா ஊழியர்களுக்கு வழங்கவில்லை என தகவல்கள் வெளியானது.


இந்நிலையில் தற்போது நிதி தட்டுப்பாட்டினை சமாளிக்க புதிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான விடுதி செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளது.


முன்னதாக ஊழியர்களுக்கு 5 நட்சத்திர விடுதிகளில் அறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது 3 நட்சத்திர விடுதிகளில் அறை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதேப்போல் முன்னதாக ஊழியர்களுக்கு தனி அறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறைகளை சக ஊழியர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.


எனினும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியே அறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது 2017-ஆம் ஆண்டிற்கு பின்னர் இணைந்த ஊழியர்களுக்கு உடனடியாக அமல் படுத்தப்படும் எனவும், 2017-ஆம் ஆண்டிற்கு முன்னர் இணைந்த ஊழியர்களுக்கு படிபடியாக அமல் படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.10 கோடி அளவிற்கு செலவினத்தை குறைக்க முடியும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி ஏர் இந்தியா 3000 கேபின் ஊழியர்களை கொண்டுள்ளது, இதில் 1400 பேர் நிரந்தர ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.