கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். கருநாடக இசை தமிழகத்தில் 2000 ஆண்டுக்கு முன்னர் தோன்றியதாகும். 

 

செம்மொழியில் ஏழிசை என கூறப்படும் "குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம்" இவையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.

 

தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் ஆவார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் தான் இன்று வரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன.

 


 

இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

 

கருநாடக இசை என்பது ராகம், தாளம் என இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் "ஸ - ரி - க - ம - ப - த - நி" என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. 

 

சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும்.  நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து ராகமும் உண்டாகிறது. 

 

நாதம் இரு வகை படும்:-

 

* ஆகதநாதம்

* அநாகதநாதம் 

 

பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள ஒலியே சுருதி ஆகும். சுருதி இரண்டு வகைப்படும்:-

 

 

* பஞ்சம சுருதி

* மத்திம சுருதி

 

சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும். ஸ்வரங்களின் பெயர்கள்:-

 


 

* ஸ - ஸட்ஜம்

* ரி - ரிஷபம்

* க - காந்தாரம்

* ம - மத்யமம்

* ப - பஞ்சமம்

* த - தைவதம்

* நி - நிஷாதம்

 

கையை கருவியாகி தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது.

 

பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். லயம் மூன்று வகைப்படும்:-

 

* விளம்பித லயம்

* மத்திம லயம்

* துரித லயம்

 

ஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும்.

 

தாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன.