பூமியைப் பாதுகாக்க வலியுறுத்தும் கூகுள் டூடுள், பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேரண்டத்தில், பெருவெடிப்பு நிகழ்ந்த பின் ஏற்பட்ட அதிசயமே பூமியின் உருவாக்கம். நான்கில் மூன்று பங்கு கடல் பரப்பு, அதன் சுழற்சியால் உருவான காற்று வெளி மண்டலம், அதன் தொடர்ச்சியாக மழை, அருவிகள், ஆறுகள், மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் மீன்கள் என பேரதிசயத்தின் பேரதிசயமாய் உள்ளது இந்தப் பூமிப் பந்து.


தற்போதுள்ள அளவீட்டின்படி ஆறறிவு கொண்ட மனிதனின் உருவாக்கம் பூமியை ஒருபுறம் பண்படுத்தினாலும், மறுபுறம் பாழ்படுத்தியது. மனித இனத்தின் பேராசை, அதிகாரப் போக்கு போன்ற காரணிகள் பூமியை மேலும் சீர் குலைத்தன. அவ்வப்போது நடத்தப்படும் அணுகுண்டு சோதனைகள் இப்பூவுலகின் இயற்கைச் சமநிலையை புரட்டிப் போட்டு விடுகிறது.


அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அதிகரித்த தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் போன்றவை பூமியை மேலும் சூடாக்கின. இதனால் நீர், வானம், நிலம், காற்று என அனைத்துத் தரப்பும் மாசுபட்டன. புவிவெப்பத்தைக் குறைக்க மரங்களை நடவேண்டும் என்ற கோரிக்கைகள் காற்றோடு கலந்து விடுகின்றன. மாறாக, மரங்கள் வெட்டப்படுவதும், வனங்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.


இதன் காரணமாகத்தான் புவி வெப்பமயமாதல், வெப்பநிலை அதிகரிப்பு, பருவநிலை மாற்றம், மழை குறைவு, வெள்ளப்பெருக்கு போன்றவை உண்டாகின்றன. இதனை தடுக்க முடியாவிட்டாலும், குறைக்க முடியும். மரங்களை நடுவது ஒன்றே இப்போது நம்முன் இருக்கும் தலையாய கடமை.


இதை சிறப்பிக்கும் வகையில் கூகுளின் முகப்பு பக்கத்தில் டூடுள் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் பூமியில் வாழும் அரிய உயிரினங்களின் சிறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, சிறகடிக்காமல் வெகு தொலைவு பறக்கும் ஆல்பட்ரோஸ் கடல் பறவை, 380 அடி உயரம் வரை வளரக் கூடிய கோஸ்டல் ரெட்வுட் மரங்கள், முதுகெலும்புள்ள உலகின் மிகச்சிறிய உயிரினமான பைடோபிரைன் அம்யூனிசிஸ், டைனோசர்கள் காலத்தில் தோன்றிய கொலேகந்த் (coelacanth) மீன், ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் கூறப்பட்டுள்ளன. பூமியைக் காக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகத்துடன் டூடுள் நிறைவு பெறுகிறது.