அலுவலகத்தில் தலைகவசத்துடன் பணிபுரியும் ஊழியர்கள்; காரணம் என்ன?
வெளியில் மட்டும் அல்ல அரசு அலுவலகத்திற்கு உள்ளேயும் தலைகவசத்துடன் பணிபுரியும் ஊழியர்கள்..!
வெளியில் மட்டும் அல்ல அரசு அலுவலகத்திற்கு உள்ளேயும் தலைகவசத்துடன் பணிபுரியும் ஊழியர்கள்..!
உத்தரபிரதேசத்தின் பண்டாவில் உள்ள மின்சாரத் துறை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து தங்கள் அலுவலக கட்டிடத்தில் அமர்ந்திருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இல்லை, இது சலான் சட்டங்களில் திருத்தத்தின் பின் விளைவுகள் அல்ல. ஹெல்மெட் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே, அதனால் மட்டுமே அவர்கள் அப்படி செய்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் அலுவலக கட்டிடத்தை பாதுகாப்பாக உணரவில்லை.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா மாவட்டத்தில் உள்ள மின்சாரத்துறை அலுவலகத்தில் கான்கிரீட் மேற்கூரை பாழடைந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அறையின் நடுவில் உள்ள தூண் மட்டுமே மேற்கூரையை தாங்கி இருப்பதாக கூறும் ஊழியர்கள், ஏதேனும் விபத்து நடந்தால் பாதுகாத்துக் கொள்வதற்காக தாங்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரிவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். இது மட்டுமின்றி மழைக்காலத்தில் கட்டிடம் ஒழுகுவதால் குடைகளுடன் பணிபுரிவதாகவும் போதிய அலமாரிகள் இல்லாததால் முக்கியமான ஆவணங்கள் அட்டை பெட்டிகளில் கிடப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அரசு ஊழியர் ஒருவர் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; பாழடைந்த அலுவலக கட்டிடத்தில் பணிபுரியும் போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்களிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மின்சாரத் துறை ஊழியர்கள் ஹெல்மெட் அணிவார்கள். நான் 2 வருடங்களுக்கு முன்பு சேர்ந்ததிலிருந்து இதே நிலைதான் தொடர்கிறது. நாங்கள் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம், ஆனால் எந்த பதிலும் இல்லை" என அவர் தெரிவித்தார்.