கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை கேரளாவைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி நிரூபித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயது வெறும் எண் மட்டுமே என்பதை 105 வயதிலும் தேர்வு எழுதி நிரூபித்த கேரள மூதாட்டிக்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி பாகீரதி. இவருக்கு வயது 105. கொல்லம் மாவட்டம் பராகுளத்தில் வசிக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததுள்ளது. ஆனால், சகோதரிகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் 3 ஆம் வகுப்புடன் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் பின்னரும் பல நேரங்களில் முயற்சித்து அவரது முயற்சி தோல்வியிலே முடிந்துள்ளது. திருமணம் ஆன பிறகும் படிக்க முயற்சித்த அவர், குழந்தைகளால் படிப்பைத் தொடர முடியவில்லை.


தற்போது இவருக்கு ஆறு பிள்ளைகள் மற்றும் 16 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில், 105 வயதிலும் படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் மாநில எழுத்தறிவு இயக்கம் நடத்தும் முதியோர் பள்ளியில் இணைந்து படித்து வருகிறார். அவரது இளைய மகள், படிப்பதற்கு உதவி செய்துள்ளார். மேலும், சமீபத்தில் எழுத்தறிவு இயக்கம் நடத்தும் தேர்விலும் மூதாட்டி பாகீரதி கலந்துகொண்டு தேர்வு எழுதினார். அவர் எழுதிய தேர்வு 4 ஆம் வகுப்பிற்கு இணையானதாகும். மேலும், கேரள எழுத்தறிவு இயக்கத்தில் ‘வயது முதிர்ந்த மாணவர்’ என்ற பெருமையை பெற்றுள்ளார் பாகீரதி.


‘மூதாட்டி பாகீரதிக்கு இந்த வயதிலும் நல்ல ஞாபக சக்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி, அவருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் சற்றும் குறையவில்லை. கற்றுக் கொள்ள விரும்பும் மற்றவர்களுக்கு மூதாட்டி பாகீரதி உந்துதலாக இருக்கிறார்’ என்று மாநில இலக்கியத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.கே.பிரதீப் குமார் கூறினார்.