சாதனைகள்!! பாரத ரத்னா விருது பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் பிறந்த நாள்!!
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றும், லிட்டில் மாஸ்டர் என்றும் செல்லமாக அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் பிறந்த நாள் இன்று.. தெரிந்துக்கொள்ளுவோம்..!!
புதுடில்லி: கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரரும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின் தெண்டுல்கர் இன்று (ஏப்ரல் 24) பிறந்தநாள். அவரின் 46-வது பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனது பதினொரு வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வந்த சச்சின் தெண்டுல்கர் அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் வீரராக திகழ்ந்தார். அவர் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றும், லிட்டில் மாஸ்டர் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். பாரத ரத்னா விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் ஆவார்.
1989 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 2013 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் 24 வருட தனது கிரிக்கெட் பயணத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ளார். 7 முறை 200 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 34357 ரன்கள் அடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டி:
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்கள் அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 248 ரன்கள் எடுத்துள்ளார். 51 சதமும், 68 அரைசதமும், 6 முறை இருநூறு ரன்கள் என சாதனை செய்துள்ளார்.
1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் பயணத்தை தொடங்கிய சச்சின் 2013 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் எதிரான கடைசி டெஸ்ட் போட்டி விளையாடினார்.
ஒருநாள் போட்டி:
463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18426 ரன்கள் அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளார். 49 சதமும், 96 அரைசதமும், ஒரு முறை இருநூறு ரன்கள் என சாதனை செய்துள்ளார். அதேபோல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 200 விக்கெட்டும் எடுத்துள்ளார். இரண்டு முறை ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றி உள்ளார்.
1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியின் பயணத்தை தொடங்கிய சச்சின் டெண்டுல்கர், 2012-ம் ஆண்டு அதே பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார்.
டி-20 போட்டி:
டி-20 போட்டியை பொருத்த வரை ஒரே ஒரு போட்டி தான் விளையாடி உள்ளார். அது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் நாள் மும்பை தி வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் ஆடினார். ஒரு டி-20 போட்டியில் விளையாடி 10 ரன்களை எடுத்துள்ளார். ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடர்:
2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற IPL தொடரில் பங்கேற்றார். 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2334 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதமும், 13 அறைசதமும் அடித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்துள்ளார்.