சிக்னலில் காத்திருக்கும் போது அதிகமாக ஹாரன் அடித்தால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியது இருக்கும் என்ற புதிய யோசனையை காவல்துறையினர் கையில் எடுத்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை: வளரும் மற்றும் வளர்ந்து வரும் மாநிலங்களில் பெரிய தொல்லையாய் இருப்பது வாகன நெரிசல். அலுவலக செல்லும் நேரத்தில் சிக்னலில் காத்திருக்கும் போது நொடிகளை பார்த்துக்கொண்டே இருக்கும் வாகன ஓட்டிகள், நொடிகள் குறைய குறைய ஹாரனை அடித்து அதிக இரைச்சலை உருவாக்குவது நமக்கு பழக்கம் ஆகிவிட்டது. இது பலருக்கு தலை வலியை ஏற்படுத்துவதுடன், ஒலி மாசையும் உருவாக்கும். சாதாரண நகரங்களிலேயே இந்த பிரச்சனை இருக்கும் போது, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. 


இந்நிலையில், சிக்னலில் ஹாரன் அடிக்கும் பழக்கத்திற்கு முடிவு கட்ட மும்பை காவல்துறை, புதிய தொழில் நுட்பம் ஒன்றை கையாண்டுள்ளது. ஒலி அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை கணக்கிடும் டெசிபல் கருவி ஒன்றை சிக்னல்களில் பொருத்திவிட்டனர். அந்த மீட்டரானது அந்தந்த சிக்னல்களில் ஒலியின் அளவு எவ்வளவு இருக்கிறது என்று கணக்கிடும். ஒலியின் அளவு 85 டெசிபலை தாண்டும் போது, பச்சை சிக்னலுக்கு பதிலாக, சிவப்பு சிக்னலே மீண்டும் விழும். இதனால், மேலும் சில நிமிடங்கள் வாகன ஓட்டிகள் சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்படும். முதல் நாள் ஹாரன் அடித்து நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகளின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை போக்குவரத்து காவல்துறையினர் உணர்ந்துள்ளனர்.



சுத்தமாக ஹாரன் அடிப்பது குறைந்துவிடவில்லை என்றாலும், ஹாரன் அடிப்பதன் அளவு குறைந்திருக்கிறது; இந்த முயற்சி நல்லபலனை கொடுத்திருக்கிறது என்கின்றனர் காவல்துறையினர். ஹாரனை அதிகமாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் சொல்வது இதுதான் “காத்திருப்பதைப் பற்றி உங்களுக்கு கவலையில்லை என்றால் இரைச்சலை ஏற்படுத்துங்கள்” என நூதனமாக தெரிவித்துள்ளனர்.