உலக பணக்கார நாடுகள் பட்டியலில் 6-வது இடத்தை பிடித்த இந்தியா!
செல்வ மதிப்பில் 8,230 பில்லியன் டாலர் மொத்த சொத்துக்களுடன் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டுள்ளது.
உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Wealth) நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டின் மதிப்பு 64,854 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
அடுத்த இடத்தில் சீனா. சீனாவின் சொத்து 24,803 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஜப்பான் 19,522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்தைப் பெறுகிறது. ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.
பிரான்ஸ் இந்தியாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி நாடுகள் பெற்றுள்ளன.
2017-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது.
2007-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் 3,30,400 பேர் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கிறார்கள். உலகளவில் இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்.
அமெரிக்காவில் 50,47,400 பேர் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கின்றனர். இந்தியாவில் 20,730 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். இந்தியாவுக்கு இந்தப் பட்டியலில் 7-வது இடம். ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இந்தியர்கள் 119 பேர்.
தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சிக் கண்டுள்ளது. அதேவேளையில், இந்தியாவின் 67 சதவிகித சொத்து ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என்பதும் அதிர்ச்சித் தகவல் ஆகும்.