‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எவ்வளவு உண்மையான வார்த்தைகள். மாதவம் செய்திடாமல் கிடைக்குமோ இப்படி ஒரு உன்னதமான பிறப்பு!!


எத்தனை எத்தனை பாகுபாடுகள், எத்தனை எத்தனை வேறுபாடுகள், பாலியல் வன்முறை, உரிமை பறிப்பு, சுதந்திர மறுப்பு, வறுமை, குடும்பச் சுமை, இப்படி பல இன்னல்கள் வாழ்க்கையில் தினம் தினம் வந்து சேர்ந்தாலும், இன்முகத்துடன் இவற்றை சமாளித்து சாதனை செய்கிறாள் பெண். 


அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை, பெண்களின் நிலைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று போராடிய நிலை மாறி இன்று பெண்கள் பல நாடுகளில் ஆட்சி செய்து வருகின்றனர்.


இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பெண்கள் தினத்தின் தொடக்கம் போராட்டத்தில் தான் தோன்றியது என்பது நிச்சயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இந்த தினத்தில் முக்கிய பங்கு உண்டு. 1975-ம் ஆண்டு தான் மார்ச் 8-ம் தேதியை பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. 



ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது. வேலை நேரத்தை குறைக்க, வாக்குறிமை பெற, கூலியை உயர்த்த என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பதினைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி அறிவித்தது.



மேலும் படிக்க | இந்த ராசி பெண்கள் அதிர்ஷ்டசாலிகள், சாதனையாளர்கள், ராணிகளாக வலம் வருவார்கள்


இந்த நாளினை உலக பெண்கள் தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் உலக மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் அவர். அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.



இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனினும் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8-ஐ உலக பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்தது. முதல் பெண்கள் தினத்தின் முழக்கம் "சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி" என்பதாகும்.


உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் சரிபாதி பேர்தான் உலக தொழிலாளர் தொகையில் இடம் பெற்றுள்ளதாக ஐ.நா. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில் தான் இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன. 



கிளாரா ஜெட்கின் உலக பெண்கள் தினம் வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம், 'அமைதியும் ரொட்டியும் தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். 


நான்கு நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், உலக மகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது. நான்கு நாட்கள் நீடித்த இந்தப் போராட்டம் கடைசியில் ரஷ்ய முடி மன்னரான ஜார் அரியணையை விட்டு இறங்குவதற்கான அழுத்தத்தை தந்தது. முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. 


இந்த மாற்றம்தான் 1917 அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷ்ய புரட்சிக்கும், அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 


தாயாய், மனைவியாய், மகளாய், சகோதரியாய், சினேகிதியாய், சேவகியாய், மேலாளராய், மென்பொருள் வித்தகராய், விமான ஓட்டியாய், விவாத பேச்சாளராய்.. எத்தனை எத்தனை பரிமாணங்கள், அத்தனையிலும் அசத்தும் பெண்குலம்!! இன்றும் தனது குடும்பத்துக்காக சமுதாய மாற்றத்துக்காக உழைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களை சொல்வதில் பெருமை கொள்கிறது ஜீ தமிழ் நியூஸ்.


மேலும் படிக்க | யானையையே பயந்து ஓட செய்த பெண்! வைரலாகும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR